செய்திகள்

கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் இந்த ஆண்டிற்கான மலர் கண்காட்சிக்காக பல்வேறு விதமான மலர் செடிகள் நடப்பட்டு தயாராகி வருகிறது.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி, கோடை வாசஸ்தலம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகின்றனர். மேலும் கோடைகாலத்தில் இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேலும் கோடைகால குளு, குளு சீசனையொட்டி மலர் கண்காட்சியும் நடத்தப்படும். இந்தநிலையில் மலர் கண்காட்சிக்காக கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொடைக்கானலில் 59-வது மலர் கண்காட்சி வருகிற மே மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பிரையண்ட் பூங்காவில் பல்வேறு விதமான மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த ஆண்டு புதிதாக ஏசிடிக் லில்லி, ஓரியண்டல் லில்லி ஆகிய ரகங்களை சேர்ந்த 1,500 மலர் செடிகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது. இவை மே மாதம் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் உதகையில் இருந்து கொண்டுவரப்பட்ட டெல்பினீயம் என்ற மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது பூங்காவில் உள்ள 716 வகையான ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அடுத்த 45 நாட்களுக்குள் பூக்கள் பூத்துக்குலுங்கும். குறிப்பாக ஏப்ரல் 15-ந்தேதி முதல் சீசன் காலம் முழுவதும் பல்வேறு வண்ண ரோஜா மலர்கள், குறிப்பாக பச்சை வண்ண ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும் என பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.