செய்திகள்

கிருஷ்ணகிரி நகராட்சியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி ரசீது, துண்டு பிரசுரங்கள் தேர்தல் பொது பார்வையாளர், கலெக்டர் வழங்கினார்கள்

கிருஷ்ணகிரி நகராட்சியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி ரசீது, துண்டுபிரசுரங்களை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே, கலெக்டர் பிரபாகர் ஆகியோர் வழங்கினார்கள்.

கிருஷ்ணகிரி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட செட்டியம்பட்டியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி ரசீது (பூத் சிலிப்), புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் வழங்கினார்கள்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே பேசியதாவது:- வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் முன்பாக தங்களின் பெயரை சரிபார்த்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு அன்று மையத்தில் செல்போன், கேமரா, மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட மாட்டாது. வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கவும், வாக்காளர் அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடியின் உள்ளே சென்றவுடன் தேர்தல் அலுவலர் வாக்களர் பட்டியலையும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையையும் சரிபார்ப்பார். பின்பு உங்கள் கை விரலில் அடையாள மை வைத்து சீட்டு வழங்கி உங்கள் கையொப்பத்தை பெறுவார். அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் விருப்பமுள்ள வேட்பாளர் சின்னத்திற்கு தங்கள் வாக்கை பதிவு செய்யலாம். மேலும் வாக்களித்தவுடன் வி.வி.பேட் எந்திரம் மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளதையும், வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யப்பட உள்ளதையும் பார்வையிட்டு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆய்வு செய்தனர்.

மேலும் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணிகளை தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஓசூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விமல்ராஜ், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் பலர் உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...