குளித்தலை,
குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில், பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நுண் உர செயலாக்க மையம் அமைத்து அங்கு தினமும் குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் ஈக்கள், கொசுக்கள் அதிக அளவில் மொய்க்கிறது.
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் இங்கு குடியிருக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இங்குள்ள நுண் உர செயலாக்க மையத்தை குடியிருப்புகள் அல்லாத வேறு இடத்திற்கு மாற்றி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பெரியார் நகர் பகுதி மக்கள் சார்பில் கடந்த மாதம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், நுண் உர செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக்கோரி நேற்று நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, குளித்தலை பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர், பெரியார் நகர் பகுதி மக்கள் குளித்தலை மாரியம்மன் கோவில் அருகே இருந்து பாய், அடுப்பு, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றுடன் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். அப்போது நகராட்சி அலுவலகத்தின் முகப்பு கதவு மூடப்பட்டிருந்ததால் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா, நகராட்சி பொறியாளர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உரிய முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் 15 நாட்களுக்குள் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 16-வது நாள் மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 59 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.