செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா இன்று பிரசாரம் நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார்

குமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். நாகர்கோவிலில் சீமான் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் இன்று நடக்கிறது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருப்பதால் அந்தந்த கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். த.மா.கா. கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (சனிக் கிழமை) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். பின்னர் 3 இடங்களில் தீவிர பிரசாரம் செய்கிறார். அதாவது நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் மாலை 6 மணிக்கும், தக்கலையில் இரவு 7 மணிக்கும், களியக்காவிளையில் 8 மணிக்கும் பிரசாரம் மேற்கொள்கிறார். துணை முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து குமரி மாவட்டம் வரும் துணை முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று பேசினார். அப்போது துணை முதல்-அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் திரண்டு வருமாறு கூறினார். இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் இன்று குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் வேர்கிளம்பி மற்றும் அஞ்சுகிராமம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயின்றீனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று குமரி மாவட்டம் வருகிறார். பின்னர் மாலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது