திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அருகே கட்டுமாவடி ஊராட்சியில் துண்டம் கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை கிடையாது. இதனால் வயல்வெளியில் இறங்கி இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம் உள்ளது.
இந்தநிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது63) என்பவர் இறந்தார். இதையடுத்து சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.
கோரிக்கை
சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.