பாட்னா
மாயாவதி மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். அவருடைய உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இன்று மாநிலங்கள் அவையில் தலித்துகளின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து அவையிலிருந்து வெளியேறியது மட்டுமின்றி தனது பதவியையும் துறந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த லாலு, வரலாற்றில் இன்றைய நாளை கருப்பு தினமாக நினைவுகூறப்படும் நிலையுள்ளது. மதிப்புயர்ந்த தலித் தலைவர் ஏழைகளை பற்றி மாநிலங்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றார்.
மாயாவதி விரும்பினால் பிகாரிலிருந்து அவரை மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்ய விரும்புகிறோம் என்றார் லாலு. பிகார் மாநிலத்திலுள்ள 243 பேரவை இடங்களில் லாலு கட்சிக்கு 80 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதாதளத்துடன் இணைந்து ஆட்சியில் உள்ளது அக்கட்சி.
நாங்கள் அவருடன் நிற்கிறோம் என்றார் லாலு.
சமீபத்தில் நடைபெற்ற உத்தரபிரதேச மாநிலத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வெறும் 18 இடங்களே கிடைத்தது என்பதால் மாயாவதி அங்கிருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்வாக இயலாது.
லாலுவின் திடீர் மாயாவதி ஆதரவு சமஜ்வாதி கட்சியின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவையும் மாயாவதியையும் இணைந்து செயல்பட வைக்கும் விருப்பத்தையே காட்டுவதாக கூறப்படுகிறது. தனது கட்சியின் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஊர்வலத்திற்கு இரு கட்சித் தலைவர்களையும் மாயாவதி அழைத்துள்ளார்.