செய்திகள்

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற - சித்தராமையா மறுப்பு

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற சித்தராமையா மறுத்துவிட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 இடங்களில் பா.ஜனதாவும், வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசும் வெற்றி பெற்றன. காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று சித்தராமையா தனது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பிவிட்டார். சித்தராமையாவின் ராஜினாமாவை சோனியா காந்தி இதுவரை அங்கீகரிக்கவில்லை.

சித்தராமையாவின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்கும் மனநிலையில் சோனியா காந்தி இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது ஆலோசகர் அகமது படேல், சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அகமது படேல், கட்சி நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது சரியல்ல. நீங்கள் உங்களின் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுங்கள். உங்களின் உடல்நிலை குறித்த விஷயத்தில் சோனியா காந்தி அக்கறையுடன் விசாரித்தார் என்றார்.

அதற்கு சித்தராமையா, நான் எனது முடிவில் உறுதியாக உள்ளேன். வேறு ஒருவரை கண்டறிந்து அவருக்கு தலைமை பதவியை வழங்குங்கள். நான் கட்சியை பலப்படுத்தும் பணியை எம்.எல்.ஏ.வாக இருந்து செய்கிறேன். எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கியபோது, கட்சியில் சிலர் வெளிப்படையாக விமர்சித்தனர். கட்சியில் சமீபகாலமாக கட்டுப்பாடுகளை மீறி பேசுவது அதிகரித்துள்ளது. எனக்கு பதவி வழங்கியதற்காக, மற்ற தலைவர்கள் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்கள். என் மீது மொத்தமாக பொறுப்புகளை போட்டுவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கூறி ராஜினாமாவை வாபஸ் பெற மறுத்ததுடன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்