செய்திகள்

வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

கொடைக்கானல் கோகினூர் பங்களா பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் கொடைக்கானல் நேதாஜிநகரை சேர்ந்த சஞ்சீவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் என்னை சந்தித்தனர்.

அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு, வெளிநாட்டு வங்கிகளில் பெரிய அளவில் கடன் தருவதாக கூறினர். அதன்படி எனக்கும் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வங்கி கடன் வாங்கி தருவதாக கூறினர். அதை உண்மை என நம்பி நானும் கடன் வாங்க சம்மதித்தேன். இதையடுத்து ஹாங்காங்கில் உள்ள ஒரு வங்கியில் ரூ.600 கோடி கடன் வாங்கி தருவதாக தெரிவித்தனர்.

இதற்காக என்னிடம் இருந்து ரூ.40 லட்சத்தை வாங்கி கொண்டனர். மேலும் வங்கி கடன் தொடர்பாக பல்வேறு ஊர்களுக்கு என்னை அழைத்து சென்றனர். ஆனால், பேசியபடி வங்கி கடன் எதுவும் வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நான், அவர்களை சந்தித்து ரூ.40 லட்சத்தை திரும்ப தரும்படி கேட்டேன். ஆனால், பணத்தை திரும்ப தராமல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ரூ.40 லட்சத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் சஞ்சீவி அவருடைய மனைவி ராணி, மகன்கள் இமானுவேல், ஜெயக்குமார், டிரைவர் குமார் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்