சிக்பள்ளாப்பூர்: காய்கறி மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய ரூ.12 லட்சம் மதுபானத்தை சிக்பள்ளாப்பூர் கலால்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வாகனச்சோதனை
கர்நாடக-ஆந்திர மாநில எல்லையில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் உள்ளது. இந்த நிலையில் சிக்பள்ளாப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் லாரியில் மதுபானம் கடத்தி செல்வதாக நேற்று சிக்பள்ளாப்பூர் கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சிக்பள்ளாப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் மலகல் கிராமத்தில் கலால் துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. கலால்துறை அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபடுவதை கண்டதும் சிறிது தொலைவில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதைபார்த்த கலால்துறை அதிகாரிகள் 2 பேரையும் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் 2 பேரும் தப்பியோடிவிட்டனர்.
3,287 லிட்டர் மதுபாட்டில்கள்
இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் லாரியை சோதனை செய்தனர். அதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் மதுபான பாட்டில்கள் பெட்டிகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த பெட்டியை திறந்துபார்த்தபோது மதுபாட்டில்கள் இருந்தன.
போலீஸ் விசாரணையில் சிக்பள்ளாப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் பதுக்கிவைத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. ஆனால் கடத்தியது யார் என்று தெரியவில்லை. இதையடுத்து 3,287 லிட்டர் மதுபாட்டில்களை பெட்டியுடன் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும். மேலும் கடத்த பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து கலால் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர், கிளீனரை வலைவீசி தேடிவருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சிக்பள்ளாப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு சட்ட விரோதமாக மதுபானம் கடத்தியதாக 599 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 608 பேர் கைதாகி உள்ளதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.