மதுரை,
மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஏப்ரல் மாதம் கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது ஒருபுறம் இருக்க, பாலியல் வன்முறைகளால் கருவை சுமக்கும் இளம்பெண்கள், சிறுமிகள் 20 வாரத்துக்குள் கருவை கலைக்க முடியாத நிலையில், இதற்கு அனுமதி கேட்டு கோர்ட்டை நாடுகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.
ஒப்புதல் பெறப்படும்
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருக்கலைப்பு சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் முன்பு பட்டியலிட பரிந்துரைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.