செய்திகள்

ஆடிப்பூர விழாவையொட்டி பீங்கான் ரதத்தில் மகா முச்சந்தி காளியம்மன் வீதிஉலா

ஆடிப்பூர விழாவையொட்டி பீங்கான் ரதத்தில் மகா முச்சந்தி காளியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் நேற்றுமுன்தினம் ஆடிப்பூரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மலையீஸ்வரன் கோவிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், மணி, சீப்பு, கண்ணாடி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளை சாற்றி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அபிஷேகங்களும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீங்கான் ரதத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பீங்கான் ரத்தில் அம்மன் வீதி உலா

இதேபோல் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள அனிச்சியகுடி மகா முச்சந்தி காளியம்மன் ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பீங்கான் ரதத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.