புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதாவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதில் கொள்கை ரீதியில் எதிரெதிர் துருவமான சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர்கள் ஒருசிலர் கருத்து தெரிவித்ததாகவும், இதனை காங்கிரஸ் தலைமை தீவிரமாக பரிசீலனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என கடைசி நேரத்தில் சரத்பவார், சோனியா காந்தியை போனில் தொடர்பு கொண்டு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மராட்டியத்தில் அரசு அமைக்க தனது ஆதரவை வழங்குவதற்கு மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது.
முதல்வராக தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்றும் மூன்று கட்சிகளும் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் உடன்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரி உள்ளது.
மேலும் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களுக்கு நான்கு அமைச்சர்கள் ஒதுக்கப்படவேண்டும் என்றும் சட்டமன்ற சபாநாயகர் பதவி வேண்டுமென்றும் கூறி உள்ளது.
ஆதாரங்களின்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த கூட்டணிக்கு ஆதரவாக இல்லை. ஆனால் அசோக் சவான், பிருதிவிராஜ் சவான் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சமாதானப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அதிகபட்ச எண்ணிக்கையானது வெளியில் இருந்து ஆதரவுக்குப் பதிலாக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிவசேனா ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் ஒரு கார் போல கூட்டணி இருக்க வேண்டும், பிரேக்கை காங்கிரஸ் கட்டுப்படுத்தும். அதே வேளையில் தேசியவாத காங்கிரசிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விரும்புகிறது.