மாமல்லபுரம்,
கம்போடியா நாட்டு உள்துறை மந்திரி ஜெனரல்கேம் அங்கு தொழில் தொடங்க வருகை தருமாறு அழைப்பு விடுப்பதற்காக இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களை சந்திப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்றுமுன்தினம் இரவு மாமல்லபுரத்திற்கு தன்னுடைய மனைவி மற்றும் அந்நாட்டு உள்துறை அதிகாரிகள் 12 பேருடன் வந்தார்.
கடற்கரை கோவிலுக்கு சென்ற அவர் அங்குள்ள புராதன சின்னங்ளை சுற்றி பார்ப்பதற்குள் மழை பெய்ததால் சில இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்தார். அதன் பிறகு சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் வரவேற்பை பெற்றுக் கொண்ட அவர் ஒரு தனியார் ஓட்டலில் கம்போடியாவில் தொழில் தொடங்க உள்ள சில தொழில் அதிபர்களை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
முன்னதாக கம்போடியா நாட்டு உள்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு தொழில் துறை சார்பில் திருவடிசூலம் பைரவர் கோவில் அறங்காவலர் தொழில் அதிபர் ரங்கசாமி புத்தர் சிலைகளை நினைவு பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் கம்போடியா புறப்பட்டு சென்றார்.