கல்லக்குடி,
திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே புதூர்பாளையம் ஊராட்சி வாண்ராம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லியோராஜ்(வயது 42). சென்டிரிங் தொழிலாளி. இவரது தம்பி ஜெயபால் (28). வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். அப்பா அந்தோணிசாமி, மகள் ஞானமேரியுடன் ஆலம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
வேலைக்கு செல்லும் அண்ணன்-தம்பி இருவரும் வேலை முடிந்ததும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே சிறு, சிறு சண்டைகள் ஏற்பட்டு பின்னர் சமாதானம் ஆகிக்கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் இருவரும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஜெயபால், அண்ணன் லியோராஜை அடித்து கீழே தள்ளியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே, லியோராஜ் பக்கத்தில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து தம்பியை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில், கல்லக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த ஜெயபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதூர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி தினகரன் கொடுத்த புகாரின்பேரில், லியோராஜை போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தம்பியை, அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.