மங்களூரு,
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து 90க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமுடன் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் மங்களூரு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்திறங்கிய நபர் ஒருவருக்கு தீவிர காய்ச்சல் உள்பட கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன.
இதனை தொடர்ந்து அவரை வென்லாக் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதித்து கண்காணிப்பில் வைத்தனர். தொடர்ந்து அவரை 24 மணிநேரம் கண்காணிப்பில் வைத்து வழக்கம் போல் நடத்தப்படும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவ உயரதிகாரி கூறினார்.
இந்நிலையில், நேற்றிரவு தனக்கு வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்று கூறி மருத்துவமனை பணியாளர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்வேன் என கூறிய அந்நபர் அதன்பின்பு காணாமல் போய்விட்டார்.
இதுபற்றி மாவட்ட சுகாதார துறை இன்று மங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.