செய்திகள்

உற்பத்தியாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்: கடலூரில் கேன் குடிநீர் கடும் தட்டுப்பாடு - நகர மக்கள் அவதி

கடலூர் மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடலூரில் கேன் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு நகர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கடலூர்,

நிலத்தடி நீர் எடுக்க உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

கடலூர் மாவட்டத்திலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் குடிநீர் ஆலைகளை ஆய்வு செய்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 27 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும், நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 4-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கேன் குடிநீர் வீடுகள், கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது நிலவும் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. நேற்று இதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

திருமண மண்டபங்கள், ஓட்டல் போன்றவற்றிலும் கேன் குடிநீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் குடிநீர் கேன்கள் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

கடலூர் நகர பகுதியை பொறுத்தவரையில், நகராட்சி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத பகுதிகளில், தனியார் டிராக்டர் மூலமாக குடிநீர் நேரடியாக கொண்டு வந்து ஒரு கேன் ரூ.8 முதல் ரூ.10 வரைக்கும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக வண்டிப்பாளையம் ரோடு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள சக்தி நகர், சிவாநகர், சிவசக்தி நகர், சிங்கார வேலு நகர் உள்ளிட்ட நகர்கள், சரஸ்வதி நகர், பவுனாம்பாள் நகர் என்று பல்வேறு பகுதிகளுக்கு நகராட்சி மூலமாக குடிநீர் வினியோகம் கிடையாது. இவர்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது டிராக்டர் குடிநீர் மற்றும் கேன் குடிநீர் தான்.

இவர்களது நிலை தற்போது மிகவும் மோசமானதாக உள்ளது. ஏனெனில் வேலைநிறுத்தம் காரணமாக கேன் குடிநீர், டிராக்டர் மூலம் வினியோகிக்கப்பட்ட குடிநீரும் தற்போது முறையாக வருவதில்லை. இதனால் சமையலுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். அனுமதியற்ற குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைப்பது என்பது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் கேன் குடிநீர், தனியார் டிராக்டர் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை சார்ந்துள்ள குடியிருப்பு வாசிகளையும் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக மாற்று நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுஒரு புறம் இருக்க நகராட்சியில் பிற பகுதியில் கேன் குடிநீர் பயன்படுத்தி வந்தவர்கள் தற்போது நகராட்சி தெரு குழாய்களிலும், வாகனங்களில் வரும் தண்ணீரையே பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் நகரின் சில தெருக்களில் தண்ணீர் பிடிப்பதில் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது.