செய்திகள்

போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூரிலிருந்து திருப்பைஞ்சீலி செல்லும் சாலையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இங்கு ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் வேறு இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி கொள்ளுமாறு சங்கத்தினரிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 5-ந் தேதி(வெள்ளிக்கிழமை) போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்கத்தினர் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதனை போலீசார் கிழித்தெறிந்து விட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று மாலை மண்ணச்சநல்லூரில் எதுமலை பிரிவு சாலையில் சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் சேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைகளில் கட்சி கொடிகளை ஏந்தி 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரிகள் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக கூறினர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போலீசார், இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு சாலையின் ஓரத்தில் நின்று இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், தொழிற்சங்கத்தினரை மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவகையில் ஒரு ஆட்டோ ஆட்களை ஏற்றி சென்ற பிறகு அடுத்த ஆட்டோவை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.