செய்திகள்

சென்னையில் மே மாதம் 5-ந் தேதி மாநாடு; வெள்ளையன் தகவல்

“அடிமை பொருளாதார எதிர்ப்பு" என்ற தலைப்பில் சென்னையில் வருகிற மே மாதம் 5-ந் தேதி மாநாடு நடத்தப்படுகிறது என்று நாகர்கோவிலில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பேசினார்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட கிளையின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நாகர்கோவில் செட்டிகுளத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிமை பொருளாதார எதிர்ப்பு என்ற தலைப்பில் சென்னையில் வருகிற மே மாதம் 5-ந் தேதி மாநாடு நடத்தப்படுகிறது. அதில் வணிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என வணிகர் சங்கத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். அது இன்றளவிலும் நிறைவேறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

வணிகர்களிடம் அதிகாரிகளின் லஞ்ச வேட்டை, அரசியல் தலையீடு, ரவுடிகளின் அட்டகாசம் ஆகியவை தற்போது இல்லை. இதற்கு காரணம் வணிகர்களின் ஒற்றுமையே.

வணிகத்தையும், வணிகர்களையும் காப்பாற்ற வணிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆட்சியாளர்கள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு பல சலுகைகள் வழங்கி வருகிறார்கள். இதனால் உள்நாட்டு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு வணிகத்தை காங்கிரஸ் இந்தியாவில் அனுமதித்தது. பா.ஜனதா அரசு அதை வளர்கிறது.

வேலையில்லா திண்டாட்டம், உள்நாட்டு நிறுவனத்தின் உற்பத்தி குறைவு, வெளிநாட்டு பொருட்கள் உற்பத்திக்கு வரவேற்பு இத்தகைய செயல்களால் இந்திய நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. இந்த செயல் தொடர்ந்து நீடித்தால், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

ஆன்லைன் வர்த்தகத்தால் உள்நாட்டு ஏழை, எளிய வணிகர்கள் கடுமையாக பாதிக்கபடுகிறார்கள். உள்நாட்டு உற்பத்திகளைப் பற்றி மக்களிடம் வணிகர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். ஒருபோதும் அரசியல் கட்சியினர் நமக்கு உதவ மாட்டார்கள்.

இவ்வாறு வெள்ளையன் பேசினார்.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், டேவிட்சன் தலைவராகவும், கிராஸ் அருள்ராஜ், அம்பலவாணன், ஜேம்ஸ் மார்ஷல் ஆகியோர் உதவி தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். ராஜதுரை பொருளாளராகவும், நாராயணராஜா செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை