புதுடெல்லி,
மருத்துவப்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டை அணுக உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு தொடர்பாக சலோனிகுமாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்கு வருகிற 8-ந்தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக்கை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டில் சலோனி குமாரி என்பவரால் மருத்துவப்படிப்புக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்குக்கும், சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்குக்கும் தொடர்பு எதுவும் இல்லை. அந்த வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப்படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. எனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை வருகிற 9-ந்தேதி வரை ஒத்திவைக்காமல் உடனடியாக விசாரிக்க ஐகோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப்படிப்பில் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.