செய்திகள்

கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதால் அதிருப்தி: பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேச டெல்லி சென்றார்-ஏக்நாத் கட்சே

கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதால் அதிருப்தியில் இருக்கும் ஏக்நாத் கட்சே பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து பேச டெல்லி சென்றார்.

தினத்தந்தி

மும்பை,

வட மராட்டியத்தில் பாரதீய ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கியவர் ஏக்நாத் கட்சே. முந்தைய பாரதீய ஜனதா அரசாங்கத்தில் முதல்-மந்திரிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் வகித்தவர். நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களில் சிக்கி மந்திரி பதவியை இழந்த ஏக்நாத் கட்சே அதன்பின்னர் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இதன் உச்சமாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட அவரது மகளும் தோல்வி அடைந்தார். இதற்கு பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் தான் காரணம் என ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மேலும் வட மராட்டியத்தில் பாரதீய ஜனதா வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமாக தலைவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலிடம் கொடுத்து உள்ளதாகவும், தனக்கு அனுமதி அளித்தால் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை அம்பலபடுத்தவும் தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசால் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் ஏக்நாத் கட்சே கட்சியின் உயர் மட்ட கூட்டங்களில் இருந்தும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் விரக்தியின் உச்சத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பாரதீய ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து முறையிடுவதற்காக டெல்லி சென்றார்.

முன்னதாக நிருபர்களை சந்தித்து ஏக்நாத் கட்சே கூறியதாவது:-

நான் கடவுள் அல்ல. உணர்ச்சிகளை கொண்ட சாதாரண மனிதன். 40 வருடங்களுக்கு மேலாக கடுமையாக உழைத்த கட்சியில் இருந்து நான் வெளியேற விரும்பவில்லை. கட்சிக்காக உழைக்க நான் இன்னும் தயாராக இருக்கிறேன். ஆனால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்து விலக்கப்படுகிறேன். இந்த அவமானம் தொடர்ந்தால் நான் வேறு வழியை சிந்திக்க வேண்டி யிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் பாரதீய ஜனதா தலைவர்கள் உடனான ஏக்நாத் கட்சேயின் சந்திப்பு, கட்சியில் இருந்து அவர் புறக்கணிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதாக இருக்கும் என அவரது நெருங்கிய உதவியாளர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு