செய்திகள்

ஒரே நாளில் 16 புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், ஒரே நாளில் 16 புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில் தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 27 கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரத்து 351 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக அரசு மேற்கொண்டது.

ரூ.28.43 கோடி மதிப்பீட்டில் 2 தொழில் பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற்றுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என 16 புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள், 60 கோடி ரூபாய் மதிப்பிலான 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்கள், தொழில் நிறுவனங்களின் குறைகளைத் தீர்க்க உதவும் தொழில் நண்பன் (பிஸ் பட்டி) இணையதளம் ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கையையும், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் இலச்சினை அவர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தொழில் துறையின் மேம்பாட்டிற்கு பல நல்ல திட்டங்களை எனது அரசு செயல்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச்சாளர அனுமதி, ஒற்றைச் சாளர அனுமதிகளைக் நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட எனது தலைமையில் தனிக்குழு, புது தொழில்களை ஊக்குவிக்க தனிக்கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை, மின்சார வாகனக்கொள்கை என தொழில்துறை மேம்பட திட்டங்கள் பல தீட்டி சிறப்புறச் செயல்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு பயன்படும் வகையில் தொழில் துறையும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ள புதிய திட்டத்தை இங்கே அறிவிக்கிறேன். அதன்படி, தொழில் நிறுவனங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும். இதற் கான பாடத்திட்டத்தையும், பயிற்சி நிறுவனத்தையும் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமே தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு பயிற்சி பெற்றவர்களிலிருந்து உகந்த நபர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

இப்படியான பல நல்ல திட்டங்களால் தான் தமிழ்நாடு பல்துறை வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை புதுப்பித்து வருகிறோம். இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழில் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவித்து புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்டுள்ள நோக்கியா நிறுவன தொழிற்சாலையை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியை மேற்கொள்ளும் உடன்பாட்டை சால்காம்ப் நிறுவனம் எட்டியுள்ளது. இது தவிர, உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீட்டில் மின்னணு சாதன உற்பத்திக்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்கள், தற்போது தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளால் புத்துயிர் பெரும் சிறப்பான சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதோடு, அதன் பொருளாதாரம் நாட்டிலேயே 2-ம் இடம் பிடிக்கிறது.

புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களுக்கு பல்வேறு ஆதரவுகளை அரசு அளித்து வருவதால், கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொண்ட 53 நிறுவனங்கள் தங்களின் வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கியுள்ளன. 219 திட்டங்கள் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளன.

கடந்த உலக முதலீட்டாளர் மாநாடு நடந்து 10 மாதங்களுக்குள் 63 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கவர்ந்ததோடு, ரூ.19 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதோடு, 83 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இதில் ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா நிறுவனங்களின் முதலீடுகளும் அடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், நிலோபர் கபில், பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சத்யீஷ் ரெட்டி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட டி.வி.எஸ். பயிற்சி மற்றும் சேவை நிறுவனம், காவிரி மருத்துவ சேவை நிறுவனம், பி.பி.சி.எல்., பவர் கிரிட் கழகம், யமகா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்