செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கவுசல்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.

அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை எதித்து அவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்துப் பேசிய கவுசல்யா, உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன்.

கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைத்தால் தான் சங்கருக்கான நீதி கிடைக்கும். எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பார். இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு