செய்திகள்

கொரோனா ஊரடங்கு, மீன்பிடி தடை காலத்தால் 3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நாகை விசைப்படகு மீனவர்கள்

கொரோனா ஊரடங்கு, மீன்பிடி தடைக்காலத்தால் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவதற்கு முன்பாகவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தடைக்காலத்துக்கு முன்பாகவே மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

எனவே கொரோனா வைரஸ் காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் நலன் கருதி தடைக்காலம் ஜூன் 15-ந் தேதியுடன் முடிவடைய வேண்டியதை மத்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் ஜூன் 1-ந் தேதியுடன் முடிவடைவதாக அறிவித்தது.

9 மீனவ கிராம மீனவர்கள்

ஆனால் நாகை அக்கரைப்பேட்டை, சீச்சாங்குப்பம், கல்லாறு, நாகூர் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் விசைப்படகு மீன்பிடி தொழிலில் சமூக இடைவெளியை பின்பற்றவும், ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு இல்லை. எனவே மீன்களுக்கு உரிய விலை கிடைக்காது என்று கூறி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை விசைப்படகு மூலம் மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்திருந்தனர். இதனால் நாகை மாவட்டத்தில் மேற்கண்ட 9 மீனவ கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் விசைப்படகுகள் மூலம் தொழில் செய்யும் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்ட மீனவர்கள் தவிர மற்ற மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலை தொடங்கினர்.

கடலுக்கு சென்றனர்

இந்த நிலையில் நாகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று(திங்கட்கிழமை) முதல் மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்கள் செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் விசைப்படகுகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு விசைப்படகுகள் தயாராக இருந்தன. மேலும் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் ஐஸ் கட்டி ஏற்றுதல், டீசல் நிரப்புதல், மீன்பிடி வலைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்ற தொடங்கினர்.

நேற்று அதிகாலை முதல் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுக்கு பூஜைகள் போட்டு ஒன்றன்பின் ஒன்றாக மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் டோக்கன் முறைப்படி நாள் ஒன்றுக்கு 40 படகுகளில் கொண்டு வரப்படும் மீன்கள் மட்டுமே நாகை துறைமுகத்தில் விற்பனை செய்ய முடியும். இதில் ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் ஒருவார காலத்துக்கு பிறகே கரை திரும்பும். 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றதால் வகை வகையான மீன்களை வாங்கி சுவைத்த மீன்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை