செய்திகள்

மது போதையில் யானையிடம் குறும்பு: துதிக்கையால் தூக்கி வீசியதில் லாரி டிரைவர் சாவு

திருவட்டார் அருகே மது போதையில் யானையிடம் குறும்பு செய்த லாரி டிரைவரை, யானை துதிக்கையால் தூக்கி வீசியதில் பரிதாபமாக இறந்தார்.

திருவட்டார்,

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செட்டிசார்விளையை சேர்ந்தவர் ஜான் சேவியர் (வயது 56), லாரி டிரைவர். இவருடைய மகள் பிரசவத்திற்காக திருவட்டார் அருகே கண்ணனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை மகளை பார்ப்பதற்காக ஜான் சேவியர் சென்றார்.

அப்போது அவர் மது அருந்திவிட்டு சென்றதாக தெரிகிறது. அங்கு மகளை பார்த்த பின்பு, ஜான் சேவியர் வீட்டுக்கு புறப்பட வெளியே வந்தார்.

யானையிடம் குறும்பு

அந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் வேர்கிளம்பியை சேர்ந்த ஒருவர் தனது இரண்டு யானைகளை கட்டி போட்டு பராமரித்து வருகிறார்.

இந்தநிலையில், ஜான் சேவியர் போதை தலைக்கு ஏறிய நிலையில் தள்ளாடியபடி யானைகளின் அருகில் சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் யானையின் அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், அதை கண்டு கொள்ளாமல் அங்கு கட்டியிருந்த 53 வயதுடைய பெண் யானையின் துதிக்கையை தடவி கொடுத்தார். அப்போது, பொதுமக்கள் அவரை விலகி செல்லுமாறு சத்தம் போட்டனர். ஆனால், அவர் தொடர்ந்து யானையிடம் குறும்பு செய்து கொண்டே இருந்தார்.

தூக்கி வீசி கொன்றது

ஜான் சேவியர் செய்த குறும்பு யானைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் யானை துதிக்கையால் அவரை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். உடனே, அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் ஜான் சேவியர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது போதையில் யானையிடம் குறும்பு செய்த லாரி டிரைவரை துதிக்கையால் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு