செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே, வாலிபரை கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு

ஆண்டிப்பட்டி அருகே, மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த மனோகரன் மகன் நாகபிரபு (வயது 24). கூலித்தொழிலாளி. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது, அதே ஊரில் மாடுகளை அலங்கரித்து மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, நாகபிரபு மதுபோதையில் காளியம்மன் கோவில் தெருவில் நின்ற சிலருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலர் அவரை கம்பு, உருட்டுக்கட்டை, கற்கள் போன்றவற்றை கொண்டு தாக்கினர். சரமாரியாக அடித்ததில், பலத்த காயம் அடைந்த நாகபிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தாய் பூங்கொடி ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான தங்கவேல் மகன் கண்ணன் (26), பாண்டி (46), முருகன் (40), பாலமுருகன் (40), பிரேம்குமார் (39) உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் வெள்ளைச்சாமி ஆஜராகி வாதாடினார்.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் கண்ணன், பாண்டி, முருகன், பாலமுருகன், பிரேம்குமார் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் மற்ற 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை