செய்திகள்

அவினாசி அருகே, மொபட் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் பலி

அவினாசி அருகே மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள போத்தம்பாளையம் துளசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் என்கிற ராமசாமி (வயது 39) விவசாயி. இவரது மனைவி கனகமணி (32). இவர்களுக்கு கவினேஷ் (11) என்ற மகன் உள்ளான்.

புஞ்சைதாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்து சாமி (48). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவமணி (40). இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். சிவமணியும், கனகமணியும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கனகமணியும், சிவமணியும் தாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவன உரிமையாளருக்கு பிறந்த குழந்தையை பார்க்க முடிவு செய்தனர். இதற்காக போத்தம்பாளையத்தில் இருந்து நம்பியாம்பாளையம் வழியாக கருவலூர் நோக்கி மொபட்டில் சென்றனர். மொபட்டை கனகமணி ஓட்டிச்சென்றார்.

நம்பியாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது.

இதில் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மொபட்டின் மீது லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த கனகமணி, சிவமணி இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையில் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போக்குவரத்தை சீர்படுத்தினர். பின்னர் விபத்தில் பலியான 2 பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.இது தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது