கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 4-ந் தேதி கூடலூர்-முதுமலை புலிகள் காப்பக எல்லையான குனில்வயல் பகுதியில் கல்யாணி என்பவரது பசு மாட்டை புலி கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது புலியின் கால் தடங்கள் அப்பகுதியில் பதிவாகி இருந்தது. பின்னர் அப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. இதற்கிடையில் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விலங்கூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கருப்பையா என்பவரது கன்றுக்குட்டியை புலி கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் அருகே ஓடக்கொல்லி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து இன்னும் 1 வாரத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நெற்பயிர்களை வயலில் இறங்கி காட்டுயானை மிதித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அரை ஏக்கர் நிலப்பரப்பளவில் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் நாசமானது. மேலும் காட்டுயானை தொடர்ந்து அப்பகுதிக்கு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதனால் காட்டுயானை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வனவிலங்குகளால் பயிர்கள் அல்லது கால்நடைகள் பாதிக்கப்பட்டால் வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்குவது இல்லை. அவ்வாறு கோரிக்கை வைத்தாலும் ஆவணங்கள் கேட்டு அலைக்கழிக்கின்றனர். மேலும் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்குவது இல்லை. மாதக்கணக்கில் காலதாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இதுவரை தொகை கிடைக்க வில்லை. வனவிலங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.