எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தெற்கு முத்துலாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). அதே ஊர் நடுதெருவைச் சேர்ந்தவர் மலையாண்டி (47). உறவினர்களான இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் ஆடுகளை வளர்த்து வந்தனர். மேலும் இவர்கள் ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தனர்.
எட்டயபுரத்தில் சனிக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று காலையில் முருகன் தனது ஒரு ஆட்டை எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டார். இதற்காக அவர் மலையாண்டியை அழைத்து கொண்டு, ஒரு மொபட்டில் ஆட்டுடன் எட்டயபுரத்துக்கு புறப்பட்டார். மலையாண்டி மொபட்டை ஓட்டிச் சென்றார். முருகன் ஆட்டை பிடித்து கொண்டு, பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
முத்துலாபுரத்தை கடந்து கோட்டூர் விலக்கு நாற்கர சாலையில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மொபட்டின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட முருகன், மலையாண்டி ஆகிய 2 பேரின் மீதும் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இந்த கோர விபத்தில் உடல் நசுங்கிய முருகன், மலையாண்டி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான முருகன், மலையாண்டி ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான எட்டயபுரம் அருகே மேல ஈரால் வடக்கு தெருவைச் சேர்ந்த மூக்கையா மகன் மகா குருவிடம் (25) விசாரித்து வருகின்றனர். திருச்சியில் இருந்து சீனி மூட்டை லோடு ஏற்றிய லாரி நெல்லைக்கு சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் இறந்த முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இறந்த மலையாண்டிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
எட்டயபுரம் அருகே மொபட் மீது லாரி மோதியதில் வியாபாரிகள் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.