செய்திகள்

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் குதித்து தாய்-மகள் தற்கொலை

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் குதித்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

தினத்தந்தி

கவுந்தப்பாடி,

கவுந்தப்பாடி அருகே உள்ள சேவாக்கவுண்டனூர் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 40). இவருடைய மகள் ஜெகதாம்பாள் (10). இவர் சேவாக்கவுண்டனூர் நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். பூங்கொடியின் கணவர் ராமலிங்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து பூங்கொடி கூலி வேலை செய்து மகளை வளர்த்து வந்தார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால், ஜெகதாம்பாள் தாயுடன் வேலைக்கு சென்று வந்தார். வறுமையிலும் மகளை எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பூங்கொடி இருந்தார்.

இந்தநிலையில் கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலம் பாப்பமடைகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தன்னுடைய தோட்டத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த கிணற்றை எட்டிப்பார்த்தார். அப்போது தண்ணீரில் 2 உடல்கள் மிதப்பது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

பின்னர் பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் மிதந்த 2 உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தார்கள். அப்போது பிணமாக மிதந்தது பூங்கொடி மற்றும் அவருடைய மகள் ஜெகதாம்பாள் என்று தெரியவந்தது.

அதன்பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தாயும், மகளும் கடந்த 2 நாட்களுக்கு முன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வறுமை காரணமாக இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாயும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை