செய்திகள்

மங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

மங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த சிலையை கொள்ளையடிக்க மர்ம ஆசாமிகள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கருவறை பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்த நடராஜர் சிலை தப்பியது.

தினத்தந்தி

திருப்பூர்,

மங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த சிலையை கொள்ளையடிக்க மர்ம ஆசாமிகள் முயன்ற இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மங்கலத்தை அடுத்த பல்லவராயன்பாளையத்தில் பரமசிவன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஐந்துவேல்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த கோவிலில் தினமும் 2 வேளை பூஜை நடக்கிறது. பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் இருந்து வருகிறார். விசேஷ நாட்களில் மட்டும் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு தேவராஜ் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசை தினம் என்பதால் கோவிலில் பூஜை செய்ய பூசாரி சென்றார். அப்போது கோவில் பிரதான கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து பதற்றத்துடன் கோவில் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் கோவிலுக்குள் சென்றார். அப்போது கோவில் கருவறை கதவின் பூட்டு அப்படியே இருந்தது. ஆனால் அதை மர்ம ஆசாமிகள் உடைக்க முயற்சி செய்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மேனகா ஆகியோர் சம்பவம் நடந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்கு சென்ற மர்ம ஆசாமிகள், கோவிலின் பிரதான பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் கோவில் கருவறை பூட்டை உடைத்து கருவறையில் இருந்த ஐந்துவேல்களையும், அங்கு வைக்கப்பட்டு இருந்த தாமிரத்தால் ஆன நடராஜர் சிலையையும், பூஜை பொருட்களையும் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் கருவறை பூட்டை மர்ம ஆசாமிகளால் உடைக்க முடியாததால் கோவில் கருவறையில் இருந்த ஐந்துவேல்கள், நடராஜர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் தப்பி உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


பூட்டை தூக்கி சென்ற மர்ம ஆசாமிகள்

கோவில் பிரதான கதவின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் அந்த பூட்டை கோவில் வளாகத்தில் வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோவில் பகுதியில் பூட்டை போலீசார் தேடினார்கள். ஆனால் உடைந்த பூட்டை காணவில்லை. எனவே மர்ம ஆசாமிகள், அந்த பூட்டையும் தூக்கி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை