செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி மகன் சங்கரபாண்டி (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் தன்னுடைய நண்பர்களான அப்பகுதியைச் சேர்ந்த அர்ச்சுணன் மகன் நம்பி (27), சிவனு மகன் மாயாண்டி (27) ஆகியோருடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கால்வாய்க்கு ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே சுப்பிரமணியபுரத்தை கடந்து சென்றபோது, அங்கு மறைந்து இருந்த 7 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளை வழிமறித்து, சங்கரபாண்டி, நம்பி ஆகிய 2 பேரையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரபாண்டி, நம்பி ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். நம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2014-ம் ஆண்டு சங்கரபாண்டியின் அக்காள் நம்பிக்கண்ணுவை குடும்ப தகராறு காரணமாக அவருடைய கணவரான மளவராயநத்தத்தைச் சேர்ந்த பொன் இசக்கி கொலை செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரபாண்டி தன்னுடைய அக்காளின் கணவரான பொன் இசக்கி, அவருடைய தந்தை நங்கமுத்து ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். எனவே பொன் இசக்கி, நங்கமுத்து இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியாக சங்கரபாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான பொன் இசக்கியின் அண்ணன் வேல்முருகன், உறவினரான லட்சுமணன் மகன் பலவேசம் உள்ளிட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை பிடிப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், ரெனிஸ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார், கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.