தண்டராம்பட்டு,
சென்னையை சேர்ந்த 3 பேர் நேற்று முன்தினம் மாலை தானிப்பாடி அருகில் உள்ள தீர்த்த மலைக்கு காரில் சென்றனர். பின்னர் தானிப்பாடியில் உள்ள நண்பரை பார்க்க காரில் வந்தனர். திருவண்ணாமலை - தானிப்பாடி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை விரட்டி சென்று சின்னியம்பேட்டை ஜங்சனில் வைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னை தாம்பரத்தை சேர்ந்த சத்தியநேசன் (வயது 25), தீனதயாளன் (25), சென்னை ஈங்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (24) என்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் காரை சோதனை செய்து பார்த்த போது, கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களும், சுமார் 1 கிலோ எடையுள்ள கஞ்சாவும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பயங்கர ஆயுதங்களையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.