செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே, லாரிகள் நேருக்கு நேர் மோதி 2 டிரைவர்கள் பலி

ஒட்டன்சத்திரம் அருகே, லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பலியானார்கள்.

ஒட்டன்சத்திரம்,

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், தனது லாரியில் ஐஸ்கிரீம் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு ஐஸ்கிரீம் கம்பெனியில் அந்த பெட்டிகளை இறக்கிவிட்டு கோவை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி மற்றொரு லாரி வந்துகொண்டிருந்தது. திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் தங்கச்சியம்மாபட்டி அருகே இந்த 2 லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 2 லாரிகளின் முன்பக்கமும் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த மணிகண்டன், மற்றொரு லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரபாகரன் (29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் மணிகண்டன் ஓட்டி வந்த லாரியில் பயணம் செய்த செய்த விருதாசலத்தை சேர்ந்த அஜித்குமார் (21) என்பவர் படுகாயமடைந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் 2 டிரைவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.