திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல் நல்லாத்தூர் ஊராட்சி. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. சரியான முறையில் மின்சார வினியோகம் செய்யப்படாமல் குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதி மக்களின் வீடுகளில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து தங்கள் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி பலமுறை புகார் மனு அளித்தும் அவர்கள் இதுநாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவும் மேல்நல்லாத்தூர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர் மின்வெட்டை கண்டித்து அந்த பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இனிவரும் காலங்களில் சீரான முறையில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.