திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெள்ளேரித்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி வனிதா (32). இவர்களுடைய மகன்கள் திலீப்குமார் (12), ருதீஸ்குமார் (3). கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகநாதன் தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் மாஞ்செடி வைக்க பள்ளம் தோண்டி அதில் குச்சி நட்டு வைத்திருந்தார். அந்த பள்ளத்தை சரியாக மூடவில்லை என தெரிகிறது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக மாஞ்செடி நடப்பட்ட பள்ளத்துடன், சேர்த்து அந்த பகுதி முழுவதும் குளம் போல் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று முன்தினம் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த மேகநாதனின் 3 வயது குழந்தையான ருதீஸ்குமார், எதிர்பாராதவிதமாக மழைநீர் தேங்கி நின்ற பள்ளத்தில் தவறி விழுந்து விட்டான்.
மூச்சுத்திணறி சாவு
அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால், மழைநீரில் மூழ்கிய குழந்தை ரூதீஸ்குமார் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான். இதற்கிடையில் தங்கள் குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மழைநீர் தேங்கிய பள்ளத்தில் ருதீஸ்குமார் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.