செய்திகள்

விளாத்திகுளம் அருகே இளம்பெண் எரித்துக் கொலை: கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

விளாத்திகுளம் அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் சென்னையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரஷித் நிஷா (வயது 33). இவர் விளாத்திகுளம் தனியார் தொண்டு நிறுவனத்தில் களப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஹரி (16), நவீன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் இருந்து உச்சிநத்தம் செல்லும் சாலையின் ஓரமாக காட்டு பகுதியில் ரஷித் நிஷா தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஷித் நிஷா, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது, அவர்களிடம் பணம் வசூல் செய்து, வங்கியில் செலுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் மிகவும் கண்டிப்பான முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

ரஷித் நிஷா, கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் உள்ள கண்மாயில், அவர் வேலை செய்த தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்தது. அப்போது ரஷித் நிஷா கண்மாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை மேற்பார்வையிட செல்வது வழக்கம்.

மேலும் ரஷித் நிஷா கொலை செய்யப்பட்ட தினத்தில் காலையில் நெல்லையில் உள்ள தொண்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மாலையில் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் நின்று கொண்டு, ஒரு வாலிபரிடம் பேசிக் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஷித் நிஷாவின் செல்போன் எண் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.