ஊட்டி,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வது, வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்வது போன்றவற்றை அதிகாரிகள் சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மீது 62 வழக்குகள், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மீது 48 வழக்குகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீது 9 வழக்குகள், மக்கள் நீதி மய்யம் மீது 1 வழக்கு, நாம் தமிழர் கட்சி மீது 1 வழக்கு, மற்ற அமைப்புகள் மீது 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பிங்கர்போஸ்ட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு நபரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.