செய்திகள்

போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை: ‘எனது இழப்பை மக்களவை உணரும்’ - சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உருக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தனது இழப்பை மக்களவை நிச்சயம் உணரும் என சபாநாயகர் உருக்கமாக தெரிவித்தார்.

புதுடெல்லி,

மக்களவை சபாநாயகராக இருந்து வருபவர் சுமித்ரா மகாஜன் (வயது 76). கடந்த 5 ஆண்டுகளாக மக்களவையை திறம்பட நடத்தி வந்த அவர் மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதி எம்.பி. ஆவார்.

பா.ஜனதா சார்பில் 8 முறை இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு, தற்போதைய தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வயதை காரணம் காட்டி பா.ஜனதாவில் சீட் மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் சுமித்ரா மகாஜனும் ஒருவர்.

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், புதிதாக வரும் எம்.பி.க்களை வரவேற்பதற்கு மக்களவையின் தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக வரும் உறுப்பினர்களை வரவேற்க மக்களவை செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவா மற்றும் அதிகாரிகள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரவேற்பே, அவர்கள் அந்த அவையின் புனிதத்தையும், தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதையும் உணரும் வகையில் இருக்கும்.

எனவே புதிய உறுப்பினர்களும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் நல்லொழுக்கத்தையும், அவை நடவடிக்கைகளில் நாகரிகத்தையும் கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மக்களவை உறுப்பினராக நான் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அப்போதெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருப்பேன். கடந்த காலத்தில் நான் பேசுவதற்கு நேரம் தரவில்லை என்று, முன்னாள் சபாநாயகர்கள் சோம்நாத் சட்டர்ஜி, மீரா குமார் ஆகியோருக்கு எதிராக நான் புகார் கூறியிருக்கலாம்.

ஆனால் நான் சபாநாயகராக இருந்தபோது அந்த பதவியின் வரையறைகளை உணர்ந்து அனைத்து உறுப்பினர்களிடமும் நியாயமான முறையில் நடந்து கொண்டதுடன், அவையின் விதிகளை கடைப்பிடிக்க அனைவரையும் வலியுறுத்தினேன். கடந்த 5 ஆண்டுகளில் கட்சி, வயது போன்ற எல்லைகளை கடந்து அனைத்து உறுப்பினர்களும் என்னிடம் அன்பு காட்டினர். இதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இனிமேல் நான் மக்களவையில் இல்லாத நிலையில், எனது இழப்பை நிச்சயம் மக்களவை உணரும். நீண்ட காலமாக இங்கேயே சுற்றி வந்த அந்த பெண்ணை (சுமித்ரா) காணவில்லையே என நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கூட நினைப்பீர்கள். இதுதான் எனது சாதனையாக கருதுகிறேன்.

அதேநேரம் எனது வாழ்க்கையின் பெரும்பகுதியாக இந்த மக்களவை இருந்திருக்கிறது என்பதும் உண்மை. அதை நிச்சயம் நானும் இழக்கிறேன். இவ்வாறு சுமித்ரா மகாஜன் உருக்கமாக கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை