பெங்களூரு,
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த 14 ஆம் தேதி முதல் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைவதையடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர் மாநில மக்களிடம் உரையாற்றிய அவர், இனிவரும் நாட்களில் கர்நாடகாவின் எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார். ஆனாலும் கொரோனா தொற்றை தடுக்க மக்கள் அரசுக்கு துணையாக நிற்க வேண்டும் என்றும், முகக் கவசம் சமூக இடைவெளி ஆகிய விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகள் பின்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எடியூரப்பாவின் இந்த திடீர் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.