பெங்களூரு,
கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தனது ஆதரவாளரான எம்.பி.பட்டீலுக்கு அந்த பதவியை பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினார். 2 மணி நேரம் அவர்கள் ஆலோசித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கட்சியில் நான் எந்த பதவியை பெறவும் போட்டி போடவில்லை. எந்த பதவியையும் கேட்க மாட்டேன். நான் கட்சியின், சாதாரண தொண்டர். சாதாரண தொண்டராகவே செயல்படுவேன். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.
இதற்கிடையே முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பெலகாவியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கட்சி மேலிடம் என்னை தலைவராக நியமித்தால் அதை ஏற்க தயாராக உள்ளேன். யாருடைய தலைமையின் கீழும் பணியாற்ற நான் தயார். கட்சி மேலிடம் யாரை தலைவராக நியமிக்கிறது என்பதை பார்க்கலாம். பதவி வழங்க வேண்டும் என்று நான் கேட்டவில்லை. பொறுப்பு வழங்கினால் அதை திறம்படி நிர்வகிப்பேன்" என்றார்.
இந்த நிலையில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மேயர் பி.என்.மஞ்சுநாத்ரெட்டி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "7-வது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கும், முன்னாள் போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டியை கர்நாடக காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரி பதவி வழங்காததால் ராமலிங்கரெட்டி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சோனியா காந்தி தலையிட்டு அவரை சமாதானப்படுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோரும் தலைவர் பதவியை பெற முயற்சி செய்து வருகிறார்கள். முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் ஆகியோர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.