செய்திகள்

சாதாரண, எக்ஸ்பிரஸ், குளிர்சாதன ரெயில்களுக்கான ரெயில் கட்டணம் உயர்வு - நள்ளிரவில் அமலுக்கு வந்தது

சாதாரண, எக்ஸ்பிரஸ், குளிர்சாதன ரெயில்களுக்கான பயணிகள் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது. புறநகர் ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரெயில் கட்டணம் கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
ரெயில்வே வாரியம் தனது வருவாயை அதிகரிக்க ரெயில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தது. கடந்த வாரம் ரெயில்வே வாரிய தலைவரும் இதனை சூசகமாக தெரிவித்தார். ரெயில் கட்டணத்தை மாற்றி அமைக்கும் திட்டம் மத்திய மந்திரிசபையின் பரிசீலனையில் இருப்பதாக அவர் கூறினார்.

ரெயில்வே துறையும் ரெயில் கட்டண உயர்வுக் கான திட்டத்தை தயாரித்து மத்திய மந்திரி சபையின் அனுமதிக்காக காத்திருந்தது. இந்த நிலையில் ரெயில் கட்டண உயர்வுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இந்திய ரெயில்வே நிர்வாகம் நேற்று இரவு ரெயில் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவில் இருந்து 4 பைசா வரை உயர்த்தி அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:-

குளிர்சாதன வசதி (ஏ.சி.) இல்லாத சாதாரண ரெயில்களில் இரண்டாம் வகுப்பு, தூங்கும் வசதி, முதல் வகுப்பு ஆகிய கட்டணங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்படுகிறது.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு, தூங்கும் வசதி, முதல் வகுப்பு ஆகிய கட்டணங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது.

அதேபோல மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சேர்கார், முதல் வகுப்பு உள்பட அனைத்து ஏ.சி. வசதி கட்டணங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் (ஜனவரி 1 முதல்) அமலுக்கு வந்தது. ஏற்கனவே பழைய கட்டணத்தில் டிக்கெட் வாங்கியவர்கள் 1-ந் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. அதேசமயம் 1-ந் தேதி அல்லது அதற்கு பின்னர் ரெயில் நிலையங்களிலோ, ரெயிலில் டிக்கெட் பரிசோதகர்களிடமோ டிக்கெட் வாங்குபவர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், ஹம்சபர், மஹாமனா, கைமான், அந்யோதயா, கரிப்ரத், ஜன் சதாப்தி, ராஜ்ய ராணி, யுவ எக்ஸ்பிரஸ், சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரெயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.

புறநகர் ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேபோல ரெயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவற்றில் எந்த மாறுதலும் இல்லை. இதில் ஏற்கனவே உள்ள கட்டணங்களே தொடரும்.

இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்கு (650 கிலோ மீட்டர்) சாதாரண ரெயில்களில் கட்டணம் சுமார் ரூ.6.50-ம், மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் களில் ஏ.சி.வசதி இல்லாத கட்டணம் ரூ.13-ம், ஏ.சி. வசதிக்கு கட்டணம் ரூ.26-ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

ரெயில் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவதற்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என கருதப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்