நாகர்கோவில்,
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றிவரும் நர்சை வக்கீல் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், நர்சை தாக்கிய வக்கீலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
இதேபோல் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் நர்சுகள் அனைவரும் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள் சிலர் தெரிவித்தனர்.