மும்பை,
மராட்டிய அரசு மேக்னடிக் மஹராஷ்டிரா 2.0' என்ற முதலீட்டாளர் மாநாட்டை சமீபத்தில் நடத்தியது. மாநாட்டில் உலக நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மராட்டிய அரசு ஒப்பந்தங்கள் செய்து கொண்டது. இதில் சீனாவை சேர்ந்த 3 நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரத்து 20 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புனே தாலேகாவில் கிரேட் வால் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் ஆட்டோ மொபைல் தொழிற்சாலை தொடங்க ரூ.3 ஆயிரத்து 770 கோடிக்கும், போடான் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடிக்கும், மற்றொரு நிறுவனத்துடன் ரூ.250 கோடி அளவிலும் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்தநிலையில் லடாக் எல்லை பிரச்சினையில் சீனா மோதல் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதனால் சீன நாட்டு பொருட்களை வாங்க வேண்டாம் என்ற கோஷம் நாடு முழுவதும் எழுந்து உள்ளது.
மராட்டிய அரசு அதிரடி
இந்த பரபரப்புக்கு மத்தியில் சீன நாட்டை சேர்ந்த 3 நிறுவனங்களுடன் செய்து கொண்ட சுமார் ரூ.5 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து மராட்டிய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுகுறித்து மராட்டிய தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் கூறியதாவது:-
மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களுடன் அதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பல இந்திய நிறுவனங்கள் அடங்கும். மற்ற 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.