புனே,
சாங்கிலியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் கடந்த வியாழக்கிழமை பாலுஸ் தாலுகாவில் உள்ள பிரா மனால் கிராமத்தை சூழ்ந்தது.
இதையடுத்து, அங்கு சிக்கி தவித்த மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு வந்தனர். மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான ஒரு படகில் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஏறியிருந்தனர்.
அப்போது திடீரென படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் சுமார் 15 பேர் நீந்தி உயிர்பிழைத்தனர். அன்றைய தினம் 9 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
காணாமல் போனவர்களை பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக தேடினர். இதில் அடுத்தடுத்து இரு நாட்களில் 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில், படகு கவிழ்ந்து வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டவர்களில் மேலும் 5 பேர் நேற்று பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்து உள்ளது.