செய்திகள்

குடியிருப்புக்கான விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்கு சலுகை: வட்டி தள்ளுபடி திட்டம் 31-ந்தேதியுடன் நிறைவு - தமிழக அரசு தகவல்

குடியிருப்புக்கான விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்கு வட்டி தள்ளுபடி திட்டம் 31-ந்தேதியுடன் நிறைவு பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில், குடியிருப்பு அலகுகள் ஒதுக்கீடு பெற்றவர்களில், வட்டிச்சுமையினால் விற்பனைப்பத்திரம் பெறாமல் உள்ளவர்களுக்கு, மாதத்தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில், ஆண்டுக்கு 5 மாத வட்டி மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

அரசால் வழங்கப்பட்ட இச்சலுகை இந்த மாதம் 31-ந்தேதிவரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். வட்டித்தள்ளுபடி திட்டத்திற்கு தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு, ஏற்கனவே நிலுவைத்தொகைக்கான தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான ஒதுக்கீடுதாரர்கள், இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி, தங்களது ஒதுக்கீட்டிற்கான நிலுவைத்தொகையை ஒரே தவணையில் செலுத்தி, விற்பனை பத்திரத்தை பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு நிலுவைத்தொகையை செலுத்தும் ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டித்தள்ளுபடி சலுகை கிடைக்கப்பெறாது என்பதால், இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.