செய்திகள்

வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில்: சேலம் எட்டுவழி சாலை திட்டத்தில் அவசரம் காட்டுவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சேலம் எட்டுவழி சாலை திட்டத்தில் அவசரம் காட்டுவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கொரோனா பேரிடர் காலத்திலும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய பா.ஜ.க. அரசு முறையிட்டு இருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா நோய் தடுப்பு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்பது, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பது உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்தாத மத்திய அரசு 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து எதிர்க்கும் சேலம் எட்டு வழி சாலை திட்டத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே, சேலம் எட்டு வழி சாலைப்பணிகள் நடைபெறும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறி இருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.

8.4.2019 அன்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த தெளிவான தீர்ப்பின் மூலம், எட்டு வழி சாலை திட்டத்திற்கு தேவையான நில எடுப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை பாதிக்கும் இந்தத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள 39 எம்.பி. தொகுதிகளில் 38 எம்.பி. தொகுதிகளிலும் குறிப்பாக இந்தத் திட்டத்தின் பாதிப்பு உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியை அ.தி.மு.க. சந்தித்தது. இதன்காரணமாக, வாக்காளர்களை பழிவாங்க சேலம் பசுமை எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு எதிரான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் இந்த மேல்முறையீடு பலமுறை விசாரணைக்கு வந்த போது ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் உள்நோக்கத்துடன் கை கோர்த்துக்கொண்டு திரும்ப திரும்ப சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார்கள்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, சேது சமுத்திரத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் மறந்து விட்ட பா.ஜ.க. அரசு, சேலம் எட்டுவழி சாலைத் திட்டம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்றும், எனவே, இந்த வழக்கை விரைந்து விசாரித்து சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது.

அ.தி.மு.க. அரசும் போட்டி போட்டுக் கொண்டு இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிட தவியாய்த் தவிக்கிறது.

10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தால், தான் போட்ட விவசாயி வேடத்தை மேல்முறையீடு மூலம் கலைத்து விட்டு மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அவசரப்படுகிறார்.

மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலை பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து சேலம் எட்டுவழி பசுமை சாலை திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

5 மாவட்ட மக்களின் எதிர்ப்பிற்கும், போராட்டத்திற்கும் ஜனநாயக ரீதியாக உரிய மதிப்பளித்து, பசுமை சாலை திட்டத்தை தற்போதுள்ள வழிக்குப் பதிலாக விவசாயிகளுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று வழிகளில் செயல்படுத்துவது குறித்து மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் ஆக்கபூர்வமாக ஆலோசிக்க முன்வரவேண்டும்.

அப்படியும் இல்லையென்றால், ஏற்கனவே இருக்கின்ற சாலையை மேம்படுத்தி மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். எத்தனையோ முன்னுரிமைப் பணிகள் அணிவகுத்து முன் நிற்க, இந்தத் திட்டத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதை நிறுத்திக் கொண்டு, மக்களுக்கு குறைந்தபட்ச நிம்மதியையாவது தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்