வேலூர்,
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கேட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ, மினிலாரி போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதே போல் வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம், சில்லறை விலையில் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கர்நாடகா, மாராட்டிய மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக நேதாஜி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயம் (சிறிய அளவிலான) தற்போது ரூ.120 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்ட மராட்டிய மாநிலத்தில் இருந்து வரும் வெங்காயம் (பெரிய அளவிலான) தற்போது கிலோ ரூ.140 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒருகிலோ முருங்கைக்காய் ரூ.220-க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.180-க்கும் விற்கப்படுகிறது. கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் முதல் தரம் ரூ.10 முதல் ரூ.15 வரை கூடுதலாக விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து நேதாஜி மார்க்கெட் காய்கனி வணிகர்கள் சங்க தலைவர் பாலு கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. எனவே நேதாஜி மார்க்கெட்டிற்கு லாரிகளில் வரும் வெங்காய வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் சிறிதளவு அதிகரித்துள்ளது. வெங்காய வரத்து அதிகரித்தால் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. பொங்கலுக்கு பின்னரே வெங்காயம் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.