செய்திகள்

வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகிறது: குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. வெளிநடப்பு

வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக கடும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் வெளிநடப்பு செய்தன.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பூஜ்ஜிய நேரத்தில் பேசும்போது, இந்திய அரசு வங்காளதேசத்துடன் உள்ள உறவை கெடுத்துவிடக்கூடாது. அந்த நாட்டிலும் லட்சக்கணக்கான இந்துக்கள் வாழ்கிறார்கள். குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் வடகிழக்கு மாநில மக்கள் பீதியில் உள்ளனர். அந்த பிராந்தியம் கொந்தளிப்பில் மூழ்கியுள்ளது என்றார்.

வன்முறையை தூண்டுகிறார்

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, ஆனால் அதற்காக வங்காளதேசம் இந்தியாவின் நாடாளுமன்றத்தை நடத்த முடியாது என்றார்.

அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சவுத்ரி அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை தூண்டுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினரின் இதுபோன்ற கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. கூச்சலுக்கு இடையே மீண்டும் சவுத்ரி பேசும்போது, திரிபுராவில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடைபெற்றது இப்போது வடகிழக்கு மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது. காஷ்மீரில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. வடகிழக்கு பிராந்தியம் மற்றும் காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதிகள் என்றார்.

வெளிநடப்பு

அவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராயும், திரிபுரா மற்றும் அசாம் மாநிலங்கள் பற்றி எரிகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

பின்னர் சபாநாயகர் வேறு ஒரு உறுப்பினரை பேசுமாறு அழைத்தார். இதனால் இந்த மசோதாவை கண்டித்து காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு