வாஷிங்டன்,
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.
செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அந்த அல்-கய்தா கூறுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் சிக்கி ஹம்சா உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்ட பின் மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்சா பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.