செய்திகள்

ஏர் கூலருக்கு மின் இணைப்பு தர வென்டிலேட்டரை அறியாமையால் துண்டித்த விபரீதம்- கொரோனா வார்டில் நோயாளி உயிரிழப்பு

ஏர் கூலருக்கு மின் இணைப்பு தர வெண்டிலேட்டரை அறியாமையால் துண்டித்ததால் கொரோனா வார்டில் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

விதி வலியது என்று சொல்வது உண்டு.

அப்படித்தான் இந்த நிகழ்வை பார்க்க வேண்டியதிருக்கிறது.

ராஜஸ்தானில் கோட்டா நகரில் உள்ள எம்.பி.எஸ். ஆஸ்பத்திரியில் அந்த 40 வயது மனிதர் கொரோனா அறிகுறிகளில் ஒன்றான கடுமையான சுவாச பிரச்சினையால் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முடிவு வர வேண்டிய நிலையில் இருந்தது. அவர் சுவாச பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு வந்ததால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மாலையில் அவரது குடும்பத்தினர் புதிதாக ஒரு ஏர்கூலர் வாங்கி கொண்டு வந்திருந்தனர். ஆஸ்பத்திரி வார்டில் கடுமையான வெப்பம் நிலவியதால், நோயாளிக்கு இந்த ஏர்கூலர் கொஞ்சம் இதம் தந்து விடாதா என்ற எதிர்பார்ப்பில் அந்த ஏர் கூலரை குடும்பத்தினர் கொண்டு வந்திருந்தனர்.

அந்த ஏர் கூலரை இயக்குவதற்கு மின்சார சாக்கெட் (பிளக் பாயிண்ட்) தேடி இருக்கிறார்கள். அருகில் ஒன்றும் அகப்படவில்லை.

அப்போது குடும்பத்தினரில் ஒருவர் ஏற்கனவே அங்கிருந்த பிளக் பாயிண்டில் சொருகப்பட்டிருந்த ஒரு பிளக்கை அகற்றி விட்டு ஏர்கூலர் பிளக்கை சொருகினார். ஏர் கூலரில் இருந்து அவர்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்சம் இதமான காற்று வந்தது.

ஆனால் அவர்கள் ஏர்கூலரை இயக்குவதற்காக அகற்றிய பிளக், நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டருக்கு உரியது என்பது அவர்களில் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் சோகம்.

30 நிமிடங்கள் கழிந்தன. அந்த 30 நிமிடமும் வென்டிலேட்டர் பேட்டரியில் இயங்கியது. நோயாளிக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பேட்டரி சக்தி தீர்ந்தவுடன் வென்டிலேட்டர் இயங்காமல் போனது. இதனால் நோயாளியின் உடல்நிலை அதிரடியாக மோசம் அடைந்து கவலைக்கிடமானது.

அவரது நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அங்கிருந்த மருத்துவ ஊழியர் உடனடியாக டாக்டரை வரவழைத்தார்.

அதற்கிடையே அந்த நோயாளியின் அருகில் சென்று மருத்துவ ஊழியர் பார்த்தபோதுதான் வென்டிலேட்டர் பிளக் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார். அவர் உடனடியாக நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக சி.பி.ஆர். என்று அழைக்கப்படுகிற சிகிச்சையை மேற்கொண்டார். (இந்த சிகிச்சை நோயாளிக்கு சுய நினைவு இல்லாத நிலையில், சுய நினைவு வருகிறவரையில் வழங்கப்படும் சுவாசம் ஆகும். இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக்கு உடனடியாக மார்பு பகுதியில் இதயத்தின் மேல் அழுத்தி பிசைந்து அல்லது வாயின் மேல் வாய் வைத்து சுவாச தூண்டல் செய்வார்கள்.)

ஆனாலும் நோயாளியை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் கடந்த 15-ந் தேதி நடந்ததை அந்த ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் நவீன் சக்சேனா உறுதிபடுத்தினார்.

இதற்கிடையே அந்த நோயாளிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் நவீன் சக்சேனா கூறுகையில், இந்த சம்பவம் மிகுந்த கவனக்குறைவால் நடந்துவிட்டது. இதற்கு காரணம் நோயாளியின் குடும்பத்தினரா, மருத்துவ ஊழியரா என விசாரிக்கிறோம்.

சம்மந்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்கிறோம். விசாரணைக்கு பின்னர் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் நடந்த ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் எல்லா நேரத்திலும் ஒரு டாக்டர், 4 அல்லது 5 ஊழியர்கள் இருப்பார்களாம். அப்படி இருந்தும், கவனக்குறைவால் ஒரு உயிர் போய் இருக்கிறது என்றால் அதை விதி வலியது என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்ல?

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு